அன்பின் சிகரம் நீ
இன்பத் தென்றல் நீ
காக்கும் தெய்வம் நீ
கருணைக் கடலும் நீ
மங்காத ஒளியும் நீ
சிங்கார உருவம் நீ
உள்ளத்தில் உறைவாய் நீ
உலகெங்கும் நிறைவாய் நீ
ஓம் சக்தி !!
அன்பின் சிகரம் நீ
இன்பத் தென்றல் நீ
காக்கும் தெய்வம் நீ
கருணைக் கடலும் நீ
மங்காத ஒளியும் நீ
சிங்கார உருவம் நீ
உள்ளத்தில் உறைவாய் நீ
உலகெங்கும் நிறைவாய் நீ
ஓம் சக்தி !!
ஆதி பராசக்தி
ஆதிசக்தி நாயகியின் அற்புதங்கள் எத்தனை
ஜோதி வடிவானவளின் சொற்பதங்கள் எத்தனை
ஆடிப்பாடி வேண்டுவோர்க்கு கிடைக்கும் சுகங்கள் எத்தனை
கோடி மலர் தூவி நாங்கள் சேர்ந்து செய்வோம் அர்ச்சனை !
முப்பெரும் சக்தியின் சொற்பதம் துர்கா
மாபெரும் கருணையின் ஓருரு துர்கா
பேரருள் நாயகி உன் பெயரதும் துர்கா
பார்புகழ் அன்னை உன் நாமமும் துர்கா
ஆரிருள் நீக்கிடும் மாயவள் துர்கா
காலமும் காத்திடும் தாயவள் துர்கா!
நோய் தீர்க்கும் வல்லமையும்
சேய் காக்கும் கடமையும்
மங்கல வாழ்வு தரும் மகிமையும்
சங்கடங்கள் தீர்த்திடும் கருணையும்
அம்பாள் உன் அருங்குணங்களில் சில
அம்மா உனக்கு நமஸ்கரங்கள் பல
ஓம் சக்தி !
உன்
சத்தியத் திருவுருவம்
சுற்றிய பகை விரட்டும்
தத்துவம் புகட்டிடும் உன்னருள்
மகத்துவம் என்பதால் அகன்றிடும் இருள்
ஓம் சக்தி !
இதயத்துக்கு சக்தி கொடு
எதையும் தாங்குவதற்கு
இனிதான வாழ்வுக்கு
கனிவாக ஆசி கொடு
ஓம் சக்தி !
உன்
திருவடி நிழல் ஒன்றே அருமருந்தாகும்
அமைதியற்ற மனநிலையில்
குறுமனம் கொண்டு பிழை செய்தோரும்
மறுமனம் மாறி உன்னடி வீழ்ந்துணர்ந்தால்
பெரும் பேறெய்தி பேரின்பம் அடைவர்
அன்னையின் அரவணைப்பால்
அனைவரும் நலமுறுவோம்
ஓம் சக்தி !
அம்பாள் உனக்கு அர்ச்சனை செய்வோம்
எம்பால் நீயும் அன்பு கொள்வாய்
உன்பால் கொண்ட பற்றால் யாம்
பண்பால் உயரும் பலன் வேண்டும்
வெண்பா பாடிய உள்ளம்
தெம்பாய்த் துள்ளும் நிச்சயம்
ஓம் சக்தி !
உன் புகழ் நான்பாட - அதனால்
என்புகழ் மேலோங்க
வம்புகள் பறந்தோட - சொல்
அம்புகள் தொடாதோட
அன்புடன் ஆதரி ஆனந்த பைரவி
ஓம் சக்தி !
செய்யும் தொழில் சிறந்திட வேண்டும்
தெய்வத்தாய் அருள்தர வேண்டும்
வாழும் நாள் வளமாக வேண்டும்
நாளும் நல்லவை நடந்தேற வேண்டும்
துயிலிலும் துர்க்கை துணையாக வேண்டும்
அகிலாண்டேஸ்வரி அருள் செய்ய வேண்டும்
ஓம் சக்தி!
மாலையொன்று வாங்கி மாதா உனக்குக் கொடுப்பேன்
காலை மாலை வேளையில் உந்தன் கானம் கேட்பேன்
வாழையடி வாழையென வாழ வழி பிறக்கும்
கோழை எண்ணம் மாறும் கோடி இன்பம் சேரும்
ஓம் சக்தி !
அம்புலி காட்டிய அபிராமி
எம்கலி தீர்க்க வருவாய் நீ
கண்மணி காக்கும் கற்பகம் உனக்கு
செந்நிறப் பூக்களில் அலங்காரம்
வெண்ணிறப் பொங்கல் நேவேத்யம்
கிண்கிணி ஒலியில் கற்பூரம்
நின்மலரடியில் நமஸ்காரம்
ஓம் சக்தி !
பத்து விரலால் மலர்த்தூவி - உன்
பத்ம பாதம் பணிந்திடுவோம்
உத்தம குணமும் உன்னருளும்
நற்றவ பயனாம் நல்லறிவும் - உன்
பொற்பத நிழலில் யாம் பெற வேண்டும்
ஓம் சக்தி !
சிலிர்க்குதம்மா என்தேகம் - என்
சிந்தையில் நீ வந்து விட்டால்
குளிருதம்மா எந்தன் மனம் - உன்னைக்
கும்பிட்டு வலம் வந்தால்
பெருகுதம்மா பேரின்பம்
அருகமர்ந்துனை தரிசித்தால்
மலருதம்மா எந்தன் முகம் - உன்
மலர்ப்பாதம் பணிந்து விட்டால்
ஓம் சக்தி !
கரகங்கள் ஆடிடும் உன் சன்னதி
கலகங்கள் தீர்த்திடும் உன் சங்கொலி
கானங்கள் ஒலித்திடும் உன் சன்னதி
கவலைகளைக் களைந்திடும் உன் கண்ணொளி
பொங்கல் மனம் கமழும் உன் சன்னதி
சங்கடங்கள் நீக்கிடும் நெய்தீப ஒளி
வாகனங்கள் வலம் வரும் உன் சன்னதி
வந்தவினை ஓட்டிவிடும் ஓம் சக்தி ஒலி
ஓம் சக்தி !
திங்கள் முடி சூடியவர் கொண்ட நாயகி
கங்கை கொண்ட நாயகன் கண் நிறைந்த நாயகி
காளை வாகனன் மனம் கவர்ந்த நாயகி
ஆனைமுகன் தந்தையின் அன்பு நாயகி
நெற்றிக்கண் வித்தகரின் நேச நாயகி
வெற்றிவேலன் தந்தையின் வேத நாயகி
ஓம் சக்தி !
பக்தியுடன் பணிந்தால் சக்திதரும் தேவி
கூடி நங்கள் அழைத்தால் தேடிவரும் தேவி
ஊழ்வினைகள் அகற்றி நல்வாழ்வுதரும் தேவி
பரிதவிக்கும் வேளையிலே பரிபாலிக்கும் தேவி
உன்விந்தை தெரிந்த பின்னே என்சிந்தை தெளிந்ததன்றோ!
ஓம் சக்தி
ஓம் சக்தி என்றிட ஓடிவிடும் ஊழ்வினைகள்
பராசக்தி என்றிட பறந்துவிடும் பகையினங்கள்
ஆதிசக்தி என்றிட அகன்றுவிடும் அல்லல்கள்
மகாசக்தி என்றிட மகிழ்ந்துவரும் மங்கலங்கள்
ஓம் சக்தி !
தாயாக வந்து நீ தாலாட்ட வேண்டும்
சேயாக நாங்கள் உன் மடியமர வேண்டும் - உன்னருள் தன்னை
பாலாக உண்டு பசியாற வேண்டும் - உன்
நினைவாக என்றும் துயில் கொள்ள வேண்டும்
நலமாகும் எண்ணங்கள் உருவாக வேண்டும்
உருவான எண்ணங்கள் உயர்வாக வேண்டும்
ஓம் சக்தி !
சக்தி நின் உருவில் தத்துவம் அறிந்தேன்
பத்தின் மடங்காய் பரவசம் அடைந்தேன்
தித்திக்கும் தேனாய் உன் கீதங்கள் ஒலிக்க
இரட்டிப்பு இன்பம் உள்ளத்துள் உணர்ந்தேன்
எத்திக்கும் எம்மை ரட்சிக்க வேண்டி
பக்தியின் உருவாய் உன்முன்னே நின்றேன்
எண்ணிய எண்ணங்கள் ஈடேற
அன்னை உமை நீயே அருள்செய்ய வேண்டும்
ஓம் சக்தி !
சிந்தை குளிரவைக்கும் செந்தூர தேவி
செவ்வரளி மலர்கொண்டு சிறப்புடனே பூஜிப்போம்
க்ஷேமங்கள் யாவையும் சேர்த்துநீ அருளிடுவாய்
தினம் தினம் உனை எண்ணும் மனம்தனை தந்திடுவாய்
ஓம் சக்தி !
அம்பிகையின் பாதம் நம்பியவர் கோடி
கும்பிட்ட கைகளுடன் குவிந்தனர் கூடி
எம்பியன உள்ளங்கள் தேவிமுகம் நாடி
கும்பலிலே நகர்ந்தனர் அவள் காலடியை தேடி
செந்தமிழில் அவள் புகழை செவிகுளிர பாடி
சேர்ந்தனர் அன்னைமுன் அனைவருமே கூடி
அம்பாளின் திருமுகத்தில் அன்பருளை ஈட்டி
இன்பங்கள் சூழ்ந்திட சென்றனர் தம் வீடு
ஓம் சக்தி !
இறகு போலும் மனது வேண்டும்
அமுது போலும் வாக்கு வேண்டும்
கமுகு போலும் வலிமை வேண்டும்
சுரபி போலும் அன்பு வேண்டும்
சருகு போலும் இடர் ஓட வேண்டும்
அருகில் உன்துணை என்றும் வேண்டும்
ஓம் சக்தி !
தொட்டன எல்லாம் துலங்கிடச் செய்யும்
துர்க்கை அன்னையின் அருளாலே
அன்பெனும் கடலினில் நீந்தி
அறிவெனும் உள்ளொளி பெருக்கி
அமைதி எனும் அக்கரை அடைந்து
ஆனந்தக் காற்றை சுவாசிப்போம்
ஓம் சக்தி !
உன்முகத்தை பார்த்திருந்தால்
என் முகம் மலருதம்மா
உன்னுருவை அலங்கரித்தால்
கண்மலர்கள் குளிருதம்மா
உன்னடியில் மலர்குவித்தால்
எந்தன்மனம் நிறையுதம்மா
ஓம் சக்தி !
மனம் ஒரு நிலையாக தினம் இருமுறையேனும்
தேவியின் திருநாமம் நாவினில் உச்சரித்து
ஆவி உடல் பொருளுக்கும் அவள் காவலினைப்பெற்று
பூவுலகில் என்றென்றும் வான்வியக்க வாழ்ந்திடுவோம்
ஓம் சக்தி !
அன்பெனும் உருவும் அறிவெனும் திருவும்
கனிந்துருகும் கருணையும்
ஒளி சிறக்கும் விழிகளும் கொண்டு
கொலுவிருக்கும் அன்னையே - உனைப்
பணிந்துவப்போம் நாங்கள்
மகிழ்ந்தருள்வாய் நீயே
ஓம் சக்தி !
ஓம் சக்தி என்று ஒன்பது முறை கூறி
ஒரு மனதாய் அவளைச் சிந்தையிலே நிறுத்தி
ஓய்விருக்கும் வேளையிலே அவள் புகழ் தன்னைப் பாடி
ஓர் கோடி இன்பங்கள் வாழ்வினிலேப் பெற்றிடுவோம்
ஓம் சக்தி !
பார்வதி தேவியின் பதம்தனைப் பணிந்து
பலன் தருவாள் அவளென்று மனமதனில் நம்பி
சிந்தைதனை ஒன்றாக்கி
வந்தனைகள் செய்திடுவோம்
குன்றாத பண்புடனே
அன்றாடம் வணங்கிடுவோம்
ஓம் சக்தி !
நெய்தீபம் ஏற்றி
மெய்ம்மலர்கள் சூட்டி
ஐங்கனிகள் படைத்து
பைந்தமிழில் பாடி
கை தொழுவோம் நாங்கள்
மெய்யறிவால் சிறந்து
உய்யும் வழி காட்டிடுவாய்
ஓம் சக்தி !
அல்லும் பகலும் அன்னை நீ
அல்லல் யாவும் தடுத்திடுவாய்
அன்பின் உருவம் நீயன்றோ
இன்பம் யாவும் தந்திடுவாய்
சிங்க வாகனம் கொண்டவளே
மங்காப் புகழைத் தந்திடுவாய்
உனை அனுதினமும் பூஜிப்போம்
மனையில் மாட்சிமை தந்திடுவாய்
ஓம் சக்தி !
அம்பாளின் திருவருளை அனுதினமும் வேண்டி
தெம்பாகத் தினம் தினம் அவள் திருநாமம் கூறி
சிங்காரப் பொற்பதங்கள் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்
ஓம் சக்தி !
அன்னையின் ஸ்வரூபம் - நமைப்
பிள்ளையெனக் காத்திடும்
அம்பிகையின் அருள் விழிகள்
நம்பிக்கையை வளர்த்திடும்
புவனமாதாப் பொற்கரங்கள்
அவனியெல்லாம் காத்திடும்
ஓம் சக்தி !
அவனிதனைக் காக்க
அவதரித்த தாயே
அற்புதங்கள் நிகழ்த்தி
அமைதி கொண்டாய் நீயே
நற்கருணை புரிந்து
நலம் கொடுக்கும் தாயே
எக்கணமும் எங்கள்
பக்கபலம் நீயே
ஓம் சக்தி !
முப்பெருந் தேவியர்
மூவுலகின் போதகர்
பத்து திக்கு தோறும்
பலனளிக்கும் தேவியர்
பண்புநலன் என்னும்
பரிசளிக்கும் கருணையர்
என்னலமும் தந்து
எக்கணமும் ரட்சிப்பர்
ஓம் சக்தி !
மாட்சிமை தந்திடும் பெரியவளே
சூட்சமம் இல்லா உள்ளம் தா
சாட்சியாய் வந்து காப்பவளே - உன்
ஆட்சியில் அனைத்தும் அற்புதம்தான்
தீட்சி கொடுத்திடும் தூயவளே - உன் திருக்
காட்சியில் கண்கள் நிறைந்திடுமே
ஓம் சக்தி !
மணக்கோலம் காண
குணமங்கை வேண்டும்
மனம் ஒன்றி செய்த மணம்
தினம் சிறக்க வேண்டும்
மனதாலும் செயலாலும்
குணம் உயர வேண்டும்
நலமான நல்வாழ்வு
நிலையாக வேண்டும்
ஓம் சக்தி !
கதிரொளிக் கண்களால் கற்றையொளி வீசி
அணைக்கின்ற கரங்களால் அன்பமுதை ஊட்டி
கனிவான நல்மனதால் கருணைமழை பொழிந்து
உருவாகும் இடரெல்லாம் சருகெனவே ஓட்டிடுவாய்
ஓம் சக்தி !
பாலால் உனக்கு அபிஷேகம்
நாலாப்புறமும் பெருங்கூட்டம்
பந்நிற மலரால் அபிஷேகம்
பக்த கோடிகள் ஆனந்தம்
தேனால் உனக்கு அபிஷேகம்
தானாய்க் கிடைக்கும் சௌபாக்கியம்
பஞ்சாமிர்தம் அபிஷேகம்
பஞ்சாய்ப் பறக்கும் பலவீனம்
இளநீராலே அபிஷேகம்
மனமகிழ்வூட்டும் புகழாரம்
சந்தனக்காப்பு அலங்காரம்
சந்ததி வாழ்வு நலமாகும் - உன்
பாதார விந்தம் நமஸ்காரம்
பாங்கான வாழ்வு நல்யோகம்
ஓம் சக்தி !
கவிமொழியால் உன்புகழ் பாட
கலியாவும் தடுத்துநீ காத்தருள வேண்டும்
புவிமீது நாங்கள் நலம் காண
அதிகாலை தினமும் நீ ஆசிக்க வேண்டும்
ஓம் சக்தி !
கனிமுகம் கொண்ட நீ
கலிதனைத் தடுத்திடுவாய்
பிறையொளிக் கண்களால்
குறைகளைக் களைந்திடுவாய் - உன்
திருக்கரம் கொண்டு நீ
அருள்மழை பொழிந்திடுவாய்
ஓம் சக்தி !
பணிந்து வந்த பக்தருக்கு
பரிந்தருளும் நாயகி
தினம் தினம் வணங்கிட - நற்
குணம் தரும் நாயகி
மனம் ஒன்றி பூஜிக்க
நலமருளும் நாயகி
பதமலர்கள் பணிந்திட
சுகம் அளிக்கும் நாயகி
ஓம் சக்தி !
சிந்தைதனில் நிறைந்தாய்
வந்தவினை அறுப்பாய்
சந்ததிகள் தழைக்க
முந்திவந்து அருள்வாய்
ஓம் சக்தி !
தங்கமுகம் தன்னில்
திங்கள் ஒளி கண்டேன்
பொங்குசினம் இல்லா
அன்பு விழி கண்டேன்
கங்கை நதி போலே
உந்தன் அருள் தன்னை
சிங்க வாஹினி - உன்
அங்கமெல்லாம் கண்டேன்
சங்கடங்கள் தீர்த்து
மங்கலங்கள் அருள்வாய்
ஓம் சக்தி !
தேவி உந்தன் அருளால்
கூடி வரும் வேளை
தேடிவரும் யோகம்
நாடிவரும் நன்மை
ஓடி விடும் சோகம்
ஓம் சக்தி !
கனவில் நின்ற திருமுகம்
கந்தவேளின் தாய் முகம்
கருணை பொங்கும் கனிமுகம்
கமலம் போலும் கவின்முகம்
அருள்மழை பொழியும் அன்புமுகம்
அனைத்தும் தந்திடும் அன்னைமுகம்
ஓம் சக்தி !
காற்றிடைத் துரும்பாய்
கனலிடைப் புழுவாய்
நீரிடைக் குழவியாய்
தத்தளிக்கும் மாந்தருக்கும்
சக்தி உந்தன் பொற்கரங்கள்
சுற்றி அணைத்துக் காத்திடும்
ஓம் சக்தி !
ஈஸ்வரியின் பாத நிழல்
வான்மதிக்கு ஒப்பாகும்
தாயவளின் நற்கருணை
வான்மழைக்கு ஒப்பாகும் - அவள்
மண்ணுலகைக் காக்கும் திறன்
விண்ணளவிற்கு ஒப்பாகும்
ஓம் சக்தி !
கண் அயர்ந்தால் உன் உருவம்
கருதினிலே உன் நாமம்
காதவழி சென்றாலும்
தாய் உன் துணை பக்கபலம்
எந்தெந்த செயலுக்கும்
எம்பிராட்டி உன் ஆசி பலம்.
ஓம் சக்தி !
கொள்ளிடம் உனக்கோர் உறைவிடம் - அது
நல்லிடம் பக்தர்கள் கூடிட
நல்லுளம் கொண்டவர் நலம் பெற அருளும்
உன்னுளம் என்றும் உன்னதம்
எம்மனமும் மகிழ்ந்திட
எக்கணமும் அருளிடுவாய்
ஓம் சக்தி !
அம்மை அப்பன் திருவருளால்
முன்னை பின்னை வினை அகன்று
இம்மை மறுமை இரண்டிலும்
அங்கம் எங்கும் நோயின்றி
எல்லையில்லா இன்பம் பெற்று
வையத்தில் உய்யும் வரம் வேண்டும்
ஓம் சக்தி !
சகல வரம் தந்திடும்
சர்வ சக்தி மாதா
பரமன் கொண்ட துணையாய்
பர்வதத்தை ஆளும்
அகிலம் போற்றும் அன்னை உன்னின்
அருளடிகள் சரணம்
பகலும் இரவும் உந்தன்
பக்கபலம் வேண்டும்
ஓம் சக்தி !
என் குறை தீர்க்கும் மையம்
உன் திருவடிகள் அம்மா
நிறைந்தோங்கும் அருள் தலம் - உன்
கலைக்கோயில் அம்மா
தருணத்தில் அருள்வதுந்தன்
கருணை விழிகள் அம்மா
ஓம் சக்தி !
(நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே -
மெட்டில் ஸ்ரீ துர்கா பாடல்)
சிம்ம வாஹினி ஸ்ரீ நவ துர்க்கையளே - உன்
அங்கமெல்லாம் நல்லருளின் உறைவிடமே
எண்ணுகின்ற எண்ணங்கள் உனதல்லவோ - அவை
ஏற்றமுறச் செய்வதுந்தன் செயலல்லவோ
அன்பர்களைக் காப்பதுந்தன் பரிவல்லவோ
ஆத்மபலம் உந்தன் பரிசல்லவோ
பசுகொடுத்த பால் உனக்கு அபிஷேகம்
நறுசுவையோடு நெய்ப்பொங்கல் நேவேத்யம்
மெய்ம்மலர் தொடுத்த மாலையினால் அலங்காரம்
கற்பூரச் சுடரொளியில் ஆலாபனம்
சோதனைகள் செய்வதுந்தான் லாகவமா - உனக்கு
சேவகம் செய்வதெங்கள் மாதவமா
வேரெனத் தாங்குவதுன் தாய் மனமா - நீ
மேலான குணமருளும் சீதனமா
வஞ்சமற்ற நெஞ்சினுக்கே தஞ்சம் கொடுப்பாய்
சஞ்சலங்கள் இல்லாத உள்ளம் அருள்வாய்
ஆறாத துயரினிலும் அறுந்துணையாவாய்
தீராத நோயினுக்கும் அருமருந்தாவாய்
விழிகள் மலர்ந்து விடு
வலிமை தந்து விடு
நெஞ்சம் நெகிழ்ந்து விடு
துன்பம் விலக்கி விடு
அன்புடன் ஆசி கொடு
ஸ்ரீ துர்க்கா
அம்மா தாயே ஸ்ரீ துர்க்கா
அருள் தர வேண்டும் ஜெய துர்க்கா
அல்லும் பகலும் நீதானே
அன்புடன் அருளும் அம்பிகையே
எங்கள் குலத்தின் தெய்வம் அம்மா
மங்கலம் தந்திடும் அன்னை அம்மா
கங்கையின் புனிதம் உனதம்மா
அங்கயர்க் கண்ணி நீ'அருளம்மா
ஆலம் விழுதெனப் பிள்ளைகளும்
வாழையடி வாழையென சந்ததியும்
தழைத்திட அருளும் உன்னாலே
அடைந்திடும் இன்பங்கள் கோடியம்மா
அறியாமை என்னும் இருளகற்றி - உன்
அடியவர் பிழைகளைப் பொறுத்தருள்வாய்
அனுதினம் அருளடி சரணம் அம்மா - உன்
திருவடி நிழலென்றும் சுகந்தமம்மா
ஸ்ரீ சரஸ்வதி
வெண்தாமரை இருக்கையில்
செந்தாமரைகள் சூழ்ந்திட
வீணை கொண்ட கைகளுடன்
வீற்றிருக்கும் தாயே
கல்வியும் கலைகளும்
செல்வங்கள் சகலமும்
மங்காத புகழோடு மகிழ்வான வாழ்வும்
தந்தெமக்கருளும் தாயே
நின்பாதம் சரணம் அம்மா
ஸ்ரீ சரஸ்வதி
ஜெய ஜெய ஜெய சரஸ்வதியே
ஜெகமெங்கும் போற்றிடும் அருள் நிதியே
ஞானத்தின் பிறப்பிடம் நீயல்லவோ - நீ
ஆணவம் அகற்றிடும் தாய் அல்லவோ (ஜெய)
பாறையில் அமர்ந்து வீணையை மீட்டி
பேதமை அகன்றிட அருள்பவளே
அறிவினில் சிறந்து நலமுடன் வாழ்ந்து - உன்
அடி பணிந்திடும் அருள் தருபவளே (ஜெய)
கலைகளின் அரசி நீயல்லவோ
இறைவி உன் நல்லருள் பரிசல்லவோ
களபத்தின் நறுமணம் உன் மகிழ்வல்லவோ - நீ
மனதினில் நிறைந்திடும் தாயல்லவோ (ஜெய)
பங்கய வாசினி பிரம்மனின் நாயகி
எங்களின் நாவினில் உறைபவள் நீயே
சந்ததியாவும் ஞானத்தில் சிறந்திட
சரஸ்வதி தாயே அருளிட வேண்டும் (ஜெய)
ஸ்ரீ மஹாலட்சுமி
துளசியின் அம்சம் ஸ்ரீதேவி
விளக்கின் அம்சம் ஸ்ரீதேவி
அட்சய பாத்திரம் ஸ்ரீதேவி
கற்பக விருட்சம் ஸ்ரீதேவி
அஷ்டாவதாரம் ஸ்ரீதேவி
அன்ன பூரணி ஸ்ரீதேவி
மங்கலம் தந்திடும் ஸ்ரீதேவி
சஞ்சலம் தீர்ப்பவள் ஸ்ரீதேவி
தாமரை மலர் உன் இருக்கையம்மா
சாதகம் செய்வதுன் கருணையம்மா!