தத்துவம் என்பது
உத்தம வாழ்வின்
புத்தகம் அன்றோ - அதன்
மகத்துவம் அறிவோம்
மனமதில் உயர்வோம்
தத்துவம் என்பது
உத்தம வாழ்வின்
புத்தகம் அன்றோ - அதன்
மகத்துவம் அறிவோம்
மனமதில் உயர்வோம்
நல்லமுது
துதித்தெழும்பும் தூய மனம்
கனிந்து நோக்கும் கருணை குணம்
கொடுத்துதவும் கொடை உள்ளம் - நன்றை
எடுத்தியம்பும் நல்லிணக்கம்
பணிந்துரைக்கும் சொல்லடக்கம்
மகிழ்ந்துவக்கும் மனோபாவம்
அறம் பரப்பும் ஆன்ம ஒழுக்கம் - இவற்றால்
சிறந்துயரும் மனிதநேயம்.
அன்பு விநியோகம்
பண்பில் பிரதானம்
கடுஞ்சொல் பிரயோகம்
நெடுநாள் பெருங்காயம்
களிப்பில் கடிவாளம் - நல்
வழிக்கு அடையாளம்
பொறுப்பில் உத்வேகம் - பெருஞ்
சிறப்பின் அத்யாயம்.
அன்பால் அனைவரும் ஒன்றிடுவோம்
பண்பால் உயர்ந்து பலன் பெறுவோம்
தெம்பாய் உலகை எதிர்கொள்வோம்
துன்பங்கள் யாவையும் வென்றிடுவோம்
எங்கும் நிறை இறைவனை நம்பிடுவோம்
இன்பங்கள் யாவையும் பெற்றிடுவோம்
அன்பு அன்பு அன்பு - அந்த
அன்பில் உண்டாம் தெம்பு
பண்பு பண்பு பண்பு - அதில்
பற்பல அர்த்தங்கள் உண்டு
அன்பும் பண்பும் சேர்ந்தால்
அத்தனை நன்மைகள் உண்டு
நம்பு நம்பு நம்பு - இந்த
உத்தம கருத்தை நம்பு
கரை காண முடியாதது
இறைவனின் பேரருள் - அதைத்
தக்க வைப்பதும் தவற விடுவதும்
தத்தமரின் தனிப்பொறுப்பு
எத்தனிக்கும் எண்ணங்கள்
அத்தனைக்கும் விடிவில்லை
தக்கவர் பெறுவர்
உற்றவை அனைத்தும்
அண்ட சராசரங்கள் இறைவனுள் அடக்கம்
ஆகம விதிகள் அவன்பால் நெருக்கும்
சத்தியம் காத்தல் ஆன்ம ஒழுக்கம் - இந்த
தத்துவம் கொடுக்கும் உயர்வின் உச்சம்
அன்பும் அரனும் (சிவன்) ஒன்றாகும்
அன்பால் இறையருள் உண்டாகும்
அன்பின் வழியில் அதர்மம் ஒடுங்கும்
பண்பிலாச் செயல்கள் பல்லுயிர் கெடுக்கும்
பக்கெனப் பதறும் பாதகம் செய்யின்
சிக்கெனப் பற்றினும் தெய்வம் சினமுறும்
பகுத்தறிவாளன் அவன் இருக்க - பிறரைப்
பழித்துரைக்க நாம் யார்?
தீபாவளி வாழ்த்து
ஒளிமயமானது இந்நாள்
வரும் நாளெல்லாம் ஒளிமயமாக
மலரும் எண்ணம் நலமானதாக
சிரிப்பும் மகிழ்வும் அதீதமாக
நிலைக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்
இனிய இல்லறம்
முதன் முதலாக பரஸ்பரத் தோற்றம்
இனிதாய் அமைய ஈசனின் ஆசி
புரிந்து கொள்ளும் மனப்பக்குவம்
சரிந்து போகும் சாதுர்யப் போக்கு
விட்டுக் கொடுக்கும் மனோபாவம்
தட்டிக் கேட்கும் செல்லக்கோபம்
இன்பத்தில் நிறைவு
துன்பத்தில் துணிவு
குறைந்து போகாத அன்புநிலை
மறந்து போகாத பண்பு நலன்கள்
பெரியவர்கள் ஆசி
அரியதோர் மேன்மை
பெருமை தரும் மக்கட் செல்வம்
பேரானந்த எல்லை
நோயின் போதும் பரஸ்பரம் பரிவு
தீயின் போலும் வார்த்தைகள் தவிர்ப்பு - இவை
அனைத்தும் இருப்பின்
இனிக்கும் இல்லறம்.
சிலிர்ப்பு
தெய்வம் கொடுக்கும் அருளினிலே
மெய் சிலிர்க்கும் சிலிர்ப்பு
தாய் கொடுக்கும் அன்பினிலே
சேய் கொள்ளும் சிலிர்ப்பு
வட்டமிடும் வண்டினங்கள்
பட்டான மலருள்ளே
தானமர்ந்து தேன் உண்ட
ஆர்ப்பரிப்பில் சிலிர்ப்பு
வான் மேகம் கண்டதும்
தானாடும் வண்ணமயில்
சிலிர்ப்பின் வேகம் அதன் ஆடல் - அந்த
பொலிவின் காட்சி ஓர் சிலிர்ப்பு
காதல் கொண்ட இருவருக்கு
முதல் பார்வையிலே சிலிர்ப்பு
தாய்மை அடையும் வேளையிலே
தாய்க்கு வரும் சிலிர்ப்பு
பாவேந்தர் பாரதியின்
பாக்களிலே சிலிர்ப்பு
மூவேந்தர் வளர்த்திட்ட
தேன் தமிழில் சிலிர்ப்பு
உத்தமர்கள் காற்றில் விட்ட
கருத்துக்களில் சிலிர்ப்பு - அதை
மற்றவர்கள் கேட்க்கும் போது
தத்தமர்க்கு சிலிர்ப்பு
கற்ற கல்வி கலைகள்
உற்ற சபை ஏறிட
பாராட்டு கரவொலியில்
ஆரவாரம் ஓர் சிலிர்ப்பு
சிலிர்ப்பு என்ற தலைப்பில்
உதித்த கவிதை சிலிர்ப்பு - அது
நிறைவு பெற்ற போது
மனதுக்குள்ளே சிலிர்ப்பு
கதைக் கவிதை
கருமேக வானம்
கரு வேலங்காடு
ஒரு பாவை அங்கே
பரிதாப நிலையில்
புலி ஒன்று கண்டு
கிலி கொண்ட பாவை
பலியாகும் நிலை எண்ணி
பரிதவித்து நின்றாள்
அந்த நிலை கண்டு
வந்த வழிச் சிறுவன்
உச்சிமரம் ஏறி
பச்சைக் கிளை ஒன்றும்
குச்சி ஒன்றும் கொண்டு
கச்சிதமாய் அம்பு செய்து
புல்லை மேய்ந்து நின்ற
புள்ளிமானை வீழ்த்த
கொள்ளைப் பசி கொண்ட புலி
புள்ளிமானை நோக்கிப் பாய
நெஞ்சம் பதைத்து நின்ற பாவை
மெல்ல உணர்ந்தாள் இயல்பு நிலை
வந்த சிறுவன் சிறுவனல்ல
கந்த வேளின் தூதன் என்று
உள்ளமதில் உணர்ந்து
இல்லம் நோக்கி விரைந்தாள்
நெஞ்சம் சிலிர்த்த நிலையில்
சிந்தையிலே தெளிந்து - இறைவன்பால்
நம்பிக்கையைப் பெருக்கி
அச்சமின்றி வாழ்ந்தாள்
திக்குத் தெரியாக் காட்டில்
சிக்கித் தவிக்கும் எவர்க்கும்
உற்ற துணை இறைவன்
பக்க பலம் இறைவன்
கடற்கரை காலை
நீலக் கடலின் கரையோரம்
சீறும் அலைகள் மோதும் வேகம்
கடற்கரை மணலின் மாசற்ற தோற்றம்
நடப்பவர் மனதில் உற்சாக எண்ணம்
ஆதவன் எழும்பும் அதிகாலை நேரம் - அந்த
கோலக் கட்சி கண்களுக்கு இன்பம்
சில்லென்ற காற்றில் சிலிர்த்திடும் உள்ளம்
அற்புதம் இதுவென உணர்ந்திடும் தேகம்
விடியலை நோக்கிய பறவைக் கூட்டம்
விரிந்த வானில் பறக்கும் தோற்றம்
ஒருபுறம் நோக்கின் மீனவர் ஓடம்
மறுபுறம் சிலரின் மெல்லிய ஓட்டம்
கவிஞர்கள் கவி எழுத
அரியதோர் சூழல்
கதை புனைவோர் கற்பனைக்கும்
புதுமை தரும் சூழல்
சங்கீத சாகதங்கள்
சங்கமிக்கும் சூழல்
அதிகாலை கடற்கரை
அமைதி தரும் சூழல்
செடிகளுக்கு அரவணைப்பு
நலமா நலமா செடிகாள்
நன்றாய் வளர்வீர் செடிகாள்
கண்ணுக்கு நிறைவாய் செடிகாள்
விண்ணைப் பார்ப்பீர் செடிகாள்
சூரிய ஒளியும் கிடைக்கிறதா
போதிய நீரும் கிடைக்கிறதா
சீரிய உரமும் கிடைக்கிறதா
மாறிய சூழல் பிடிக்கிறதா
மழையும் வந்திடும் செடிகாள்
மகிழ்வாய் வளர்வீர் செடிகாள்
வெயிலும் வந்திடும் செடிகாள்
வேதனை வேண்டாம் செடிகாள்
நலமாய் நலமாய் செடிகாள்
நன்றாய் வளர்வீர் செடிகாள்!
வானம்
நட்ட நடு வானில்
வட்ட நிலாத் தோற்றம்--அதை
சுற்றியுள்ள வானில்
நட்சத்திரக் கூட்டம்
வானில் உள்ள கோள்கள் எல்லாம்
ஆதவனை சுற்றும் --அந்த
ஆதவனின் ஒளிக்கதிர்கள்
பாரினுக்கு வெளிச்சம்
வேகம் அதிகம் கொண்ட
மேகங்களின் கூட்டம்--அந்த
மேகம் குளிரும் வேளை
மாமழையின் துவக்கம்
பொலிவு கொண்ட வானவில்லை
அரிதாய் கொடுக்கும் வானம்--அந்த
இயல்பு நிலை மாந்தருக்கு
பயக்கும் இன்பம் அதீதம்
எணணி வியக்கும் விந்தைகளை
அள்ளி வழங்கும் வானம் - அந்த
வானமதனின் எல்லை
நாமறிந்ததில்லை.
அண்ணாநகர் டவர் பூங்கா
நுழைவாயில் வந்ததுமே
இழையோடும் இன்பம்
வருஷங்கள் பல கண்ட
விருட்சங்கள் ஏராளம்
ஒழுங்கான சீரமைப்பில்
அலங்கார செடிக்கூட்டம்
பச்சை பசேலென
இச்சையூட்டும் புல்வெளிகள்
ஆனந்த களிப்போடு
ஆர்ப்பரிக்கும் பறவையினங்கள்
கொண்டாட்டம் கொண்டிடும்
சிங்கார மழலைகள்
கண் நிறைந்த குழந்தைகளைக்
கண்டு ரசிக்கும் பெற்றோர்கள்
உலவி வரும் பலர் மகிழ
நிலவொளியாய் மின் வெளிச்சம்
செயற்கை நீரூற்றுக்களோ
இயற்கை அழகு
ஏரியின் வடிவமைப்பில்
பூரிக்கும் நல்லுணர்வு
நடைப்பயிற்சி என்றாலும் - பிற
உடற்பயிற்சி என்றாலும்
விருப்பத்தைப் பூரணிக்கும்
சிறப்பு இங்கு உண்டு
தேர்வுக்கு படிப்பதற்கும்
தேர்வு செய்யும் காலைச் சூழல்
மனம் விட்டு பேச
தினம் கூடும் முதியோர்
உயர்ந்து நிற்கும் கோபுர அழகு
உயரத்தில் செல்ல உந்துவோர் பலர்
உச்சியில் ஏறி உற்று நோக்கின்
கச்சிதமாக நகரக் காட்சி
சில்லென்ற காற்றிலும்
உள்ளம் சிலிர்த்திடும்
மொத்தத்தில் தந்திடும்
ஒப்பற்ற புத்துணர்வு
இயற்கை
வானம் பார்க்கும் புல்வெளி
வானளாவிய பசுமரங்கள்
பட்ட மரங்களும் சில உண்டு
பறவைகள் ஒன்றிரண்டு அதில் உண்டு
பட்சிகளின் கீச்சொலியில்
இச்சை கொள்ளும் மழலைகள்
மனதை ஈர்க்கச் செய்யும்
பலவகை பன்னிற மலர்கள்
பறந்து விரிந்த விருட்சங்களால்
சிறந்து அமைந்த நிழற்குடைகள் - அவை
களைப்பு கொண்ட பலருக்கு
இளைப்பாறிச் செல்லும் நற் கூடங்கள்
தெளிந்த நல் நீரோடை - அதில்
தெம்பாய் நீந்தும் வாத்தினங்கள்
ரசனை கொண்ட பலருக்கு
பசியை மறக்கும் பசுமை காட்சிகள்
இயற்கை தந்திடும் சுகந்தம்
பயக்கும் இன்பம் அதீதம்.
பிறந்தநாள் வாழ்த்து
பல்லாண்டு பல்லாண்டு
பவித்ர நிறைவோடு
இல்லாமை இல்லாமல்
எல்லாமும் பெற்று
அன்போடும் பண்போடும்
இன்புற்று வாழ
நன்னாளாம் இந்நாளில்
நனிசிறந்த நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்து
புத்தம் புது வருடம்
புத்தம் புது காலை
நித்தம் நித்தம் வாழ்வில்
சொல்லும் செயலும் நன்றாகி
சொக்கும் இன்பம் பெருகி
இல்லம் மகிழ்வில் திளைத்திட
எங்கும் நிறைந்த இறைவன்
நன்றும் நலனும் அருளட்டும்