இன்றைய சமுதாய நிலைமை 


சிரிப்பதற் கென்று ஒரு பிறவி 

அரியதாம் இப்பிறவி 

ஆறறிவை சுமந்து வாழும் 

மாதவமாம் மனிதப்பிறவி 


ஆறறிவுக்கு மேல் ஒன்றாய் 

ஏழாம் அறிவும் தாம்  கொண்டு 

உன்னதமாய் உலகில் வாழும் 

நல்லவர்கள் ஓர்வகை 


கொண்ட அறிவில் ஒன்றை குறைத்து 

அண்டத்தை அபாயமாக்க 

அக்கிரமச்  செயல் செய்யும் 

வக்கிரக்கூட்டங்கள் -  ஓர்வகை 


திடீரென குண்டுவெடிப்பு 

அதிகார வட்டம் அனுதாப அறிவிப்பு 

பரிகாரச் செயல்பாடு 

உபகாரப் பணமுடிப்பு 


அப்பாவிகள் படுகொலைக்கு 

எப்பாவிகள் காரணம் என்று 

துப்பாயும் வேலையே பிரதான மாகிட 

நல்லாட்சி இருந்தாலும் நாடு வளரத்தடை - ஓர்நிலை 


ஊடகங்கள் என்றாலும் - பிற 

பாடங்களைக் கற்றாலும் 

நல்லவற்றைத் தள்ளிவிட்டு 

அல்லவற்றை  அள்ளிக்கொள்வோர் - ஓர்வகை 


பாடுபட்டுப் பணத்தை 

கூடிக்குடித்து அழித்து - தம் 

மனைவி மக்கள் வாடும் 

விளைவை மறந்த மடையர்  -  ஓர்வகை 


பாரதியின் கனவுப்பெண் 

சாரதியாய் வாழ்க்கைத் தேரில் 

சாதுர்யமாய்த் துணிவோடு 

ஆயுள் வரைச் செல்லும் அறிவுடைப்பெண் - மாறாக 


துஷ்ப்ரயோகம் செய்வதில் பிரத்யேகராகி 

வன்முறைச்செயல் செய்து வம்புக்கு விலை கொடுத்து 

உத்தமம் மறைப்பதில் அக்கறை காணும் 

வித்தகப் பெண்கள் எத்தனிப்பது  -  ஓர்நிலை


ஆதவனின் தீவிரம் பாமரரைத் தாக்கினும் - அந்த 

பாமரர்கள் தாம் உழைத்து 

பாருயிர்க்கு உதவுவார் - தம் 

பேருழைப்பிலும் என்றும் நிறைவுபெற்று வாழ்வார் -  ஓர்வகை 


விலைவாசி உயர்வுக்கும் - குழந்தைகளைக் 

கரைசேர்க்கும் உணர்வுக்கும் இடையே 

நடுவர்க்கம் படும் பாடு 

விடிவு காணப் பெரும்பாடு -  ஓர்நிலை 


உழைக்கும் வலுவின்றி 

பிழைக்க வழியிலார்க்கு 

அடுத்த வேளைப் பசிதீர்க்க 

கொடுத்துதவி வாழ்வார் -  ஓர்வகை 


உயர்நிலையைத் தாம் அடைந்து - பிறர் 

துயர் அறியா உணர்வோடு 

ஆணவம் மேலோங்கி வக்கிரங்கள் 

தாண்டவமாட கொக்கரிப்போர்,


இறைவனின் விழிகளில் சிக்குண்டு 

கரை காண  வகையறியா 

பரிதாப நிலை எய்தி 

பரிதவிக்கும் நாளை மறந்து வாழ்வோர் -  ஓர்வகை 


சரியாகும் சமுதாயம் 

தனியொருவன் கையில் 

தனிமனிதன் தான் தன்னை 

சரிசெய்யும் நிலை வேண்டும்